Tuesday, February 20, 2018

வெள்ளை துப்பட்டி

பால்ய நாட்களின் நினைவுகளை நாளும் சுமக்கையில் இந்த வெள்ளை துப்பட்டியும் அந்நினைவுகளோடு இணைந்து கலக்க விளைவு வெண்மையாய் சற்று மென்மையாய் காற்றில் அசைந்தாடி இதயத்தை வருடிக் கொண்டிருக்கிறது இன்னமும்!
இப்போதெல்லாம் இஸ்லாமிய சமூகத்தில் வளரும் தலைமுறையில் அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் "ஹிஜாப்" என்றாலே அது தற்பொழுது பலரும் அணியும் கருப்பு நிறத்தினாலான "புர்கா" என்றழைக்கப்படும் ஆடை மட்டுமே என்று மனதில் அழுந்தப் பதிந்துப் போய்விட்டது!

ஆயினும் கூட கிட்டத்தட்ட பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை வெள்ளை துப்பட்டிக்கு எங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை, கடலூர் மட்டும் அருகிலுள்ள சில மாவட்டத்தின் ஊர்களிலுள்ள இஸ்லாமிய பெண்களிடையே அதற்கிருந்த மவுசு என்பது அலாதியான ஒன்று!
வெள்ளை துப்படியிலும் கூட இருவகைகள் உண்டு ஒன்று முழு அல்லது பெரிய துப்பட்டி மற்றொன்று அரை அல்லது சிறிய துப்பட்டி! இரண்டையுமே அப்போதெல்லாம் இஸ்லாமிய சமூகத்தின் பெண்கள் ஹிஜாபாக விரும்பி அணிவார்கள்.
துப்பட்டி அணிவதில் கூட சில ஊர்களுக்கென்று பிரத்யேகமான முறை உண்டு.
உள்நாட்டிலேயே இவ்வை துப்பட்டிகள் கிடைத்தாலும் கூட சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவிலிருந்து பயணம் வருபவர்கள் கொண்டு வருபவைகள் நேர்த்தியும் தரமும் மிக்கவையாக விளங்கின! அரபுநாடுகளிலிருந்து வருபவர்கள் கொண்டு வந்ததும் கூட இந்த நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதே எனலாம்.
எனக்கு தெரிந்தவகையில் எம்.எஸ் துப்பட்டி (பரங்கிப்பேட்டையில் அறிமுகம் செய்யப்பட்டதாக சொல்வார்கள்) அதோடு ராஜா ராணி, பூக்காச்சி மற்றும் ஜாக்கோட் இப்படி பல பெயர்களில் துப்பட்டி வகைகள் வந்ததுண்டு.
வெள்ளை துப்பட்டியில் எம்ப்ராய்டிங் வேலைப்பாடுகள் செய்ய தனி தையல்கடைகள் எல்லாம் அப்போது இருந்தது! துவைப்பதற்கு தனிவகை சோப்பு மற்றும் குருவி நீலம் எல்லாம் மிக பிரசித்தமாய் இருந்தன. பிறகு காலப்போக்கில் வெள்ளை துப்பட்டி கொஞ்சம் வண்ணம் பூசி பூக்கள் கூட போட்டுப்பார்த்தது.
தொன்னூறுகளின் கடைசியில் இரண்டாயிரத்தின் துவக்கத்தில் அரபுநாட்டின் இருந்து கொண்டுவரப்பட்ட புர்கா கொஞ்சம் கொஞ்சமாக துப்பட்டியை கபளீகரம் செய்ய அது கிட்டத்தட்ட மறைந்து மறந்துபோன நிலையே எங்கள் பகுதிகளில்.....!
வீட்டிலுள்ள பெண்களோடு சிறுவயது பிள்ளைகள் வெளியில் சென்றால் அந்த துப்பட்டியின் முந்தானையை பிடித்துத்கொண்டே சென்றதெல்லாம் இப்போதும் மனக்கண் முன்னே அழகான நிழலாடலாக....!!!!

Samsul Hameed Saleem Mohamed

No comments: