Wednesday, January 27, 2016

இறையருட் கவிமணி, பேராசிரியர் கா.அப்துல் கபூர்


இறையருட் கவிமணி, பேராசிரியர் கா.அப்துல் கபூர் 

சீரிய செந்தமிழ் எம்மொழியாம் – எங்கும்
சிறந்திடும் இஸ்லாம் எம் வழியாம்
நேரிய இலக்கியம் போற்றுவதே – எங்கள்
நெஞ்சம் இனித்திடும் நற்பணியாம்

நிறையுள்ள செய்யுளும் உரைநடையும் – பொன்
நெஞ்சத்தைக் காந்தமாய்க் கவர்ந்திழுக்கும்
கறையில்லா இஸ்லாம் இலக்கியமோ – ஒளிக்
கதிர்மழைக் குன்றேன உயர்ந்திருக்கும்.

தனிப்பெரும் சிறப்புகள் மிகவோங்கி – நன்கு
தழைத்திடும் நிலத்தினை வாழ்த்திடுவோம்
இனித்திடும் தமிழினில் மலர்ந்திருக்கும் – உயர்
இஸ்லாம் இலக்கியம் வளர்த்திடுவோம்

- இறையருட் கவிமணி

--------------------
இறையருட்கவிமணியின் துஆ நூறிலிருந்து
சில வரிகள்:
தாங்குதற் கியலா தண்டனை தந்தால்
ஏங்கியே விடுவோம் யாங்கள் ; அதனால்
குமைந்திடச் செய்யும் கொடும்பளு வான
சுமைகளை எம்மேல் சுமத்தி விடாதே.
நின்னருள் வாயிலை நெடுகத் திறந்து
துன்னரும் பேறுகள் தொடரச் செய்வாய்.

------------------
அதிரையில் கல்விப் பணி
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள காதர் முஹ்யத்தீன் கல்லூரியில் 1962 முதல் 1967 வரை தமிழ்த் துறைத் தலைவராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார் கா. அப்துல் கபூர்.

அவர் முதல்வராக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்போதைய சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த திரு. நெ.து. சுந்தரவடிவேலு பங்கேற்றார். முதல்வரின் வரவேற்புரையால் கவரப்பட்ட நெ.து.சுந்தர வடிவேலு அவர்கள் தான் ஆற்றிய உரையில்,

"நான் எத்தனையோ அறிஞர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். இன்று உங்கள் முதல்வர் நிகழ்த்திய சொற்பொழிவைப் போன்று வேறெங்கும் கேட்டதில்லை. மனம்விட்டுச் சொல்கிறேன். சிறிது கூட தடையில்லாமல் சரளமாகவும் வேகமாகவும் எப்படி அவரால் பேச முடிகிறது என்று வியந்து போனேன். தமிழ் பேச்சாளர்களில் உங்கள் முதல்வரின் பேச்சு தனிப்பாணி; அவரது மொழியழகும் சொல்லழகும் நடையழகும் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளன " என்று புகழ்ந்துரைத்தார்.

[ஹ.மு.நத்தர்சா எழுதி சாகித்திய அகாதெமி வெளியிட்ட "இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர்" என்ற நூலிலிருந்து]
------------
[பேராசிரியர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் அவர்கள் மறைந்த தினமான ஜனவரி 11-ஆம் தேதியன்று எழுதிய கட்டுரை இது]

இந்த மண்ணை விட்டுப் போகையில் சடலமாகப் போகின்றவர் பலர். சரித்திரமாகிப் போகின்றவர் ஒரு சிலர். வரலாறு சமைப்பது கருவாடு சமைப்பது போலன்று.

வாழ்வாங்கு வாழ்ந்த பின்னும் வாடாத மலராய் நம் உள்ளத்தில் மணம் வீச வேண்டும். ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’. பிறந்த பயனை பிறரறியச் செய்ய வேண்டும்.

தமிழ் எப்போது பிறந்தது எனக்குத் தெரியாது. தமிழ் எங்கு பிறந்தது அதுவும் எனக்குத் தெரியாது. நானறியேன். ஆனால் தமிழ் தவழ்ந்ததை நான் கண்டிருக்கிறேன், என் தமிழாசான் “இறையருட் கவிமணியின் நாவில் எங்ஙனம் தவழ்ந்து விளையாடும்; எப்படியெல்லாம் புரண்டு விளையாடும் என நானறிவேன். இந்த தமிழ்ப் பாவாணர் எனக்கு தமிழ்ப்பா ஆனவர்.

அந்த நாவுக்கரசரின் நறுமணம் கமழும் நற்றமிழ் மழையில் நாள்முழுதும் நனைவது நலம்பயக்கும் ஆனந்தம்; நயம்பூக்கும் அனுபவம். இந்த எழுதுகோல் ஓவியரிடம் இலக்கியம் பயில்வது எழும்பிவரும் கடலலையில் இரண்டு கால்களையும் நனைக்கையில் ஏற்படும் நயாகரா அதிசயம். இந்த பன்மொழிப் புலவரின் பன்னீர் தெளிக்கும் பைந்தமிழை பருகுவது பேரின்பம்.

இறையருட் கவிமணி!
இதயத்தின் ஒளிமணி!
 சொல்லும் செயலும்விரலும் ரேகையுமாய்விளங்கிய வித்தகர்!
 நாக்குத் திரியில்மறைச் சுடரேந்திதீனெறி காட்டிய மனித விளக்கு

என்று இவரை கவிபாடி களிப்புறுகிறார் கவிஞர் கஃபூர் தாசன்.

கடல் மடையின் திறப்பா அல்லது காட்டாற்று வெள்ளமா என கருத்தியம்பக் குழம்பும் கன்னித்தமிழுப் பேச்சு அவர் பேச்சு. தென்குமரி திருவையின் தேன்சிந்தும் தெவிட்டா தமிழ் அவரது தமிழ்.

பைந்தமிழ் வளர்த்த இவரது பண்ணையில் நானும் மேய்ந்தேன் என்பது நான் அடைந்த பாக்கியம். அவரது கூரிய சொற்களும் சீரிய சொற்களும் வீரிய விதைகளாய் என்னுள் விதைந்தன. இளம்பிறை பள்ளியை வளர்பிறையாய் ஆக்கிய முத்தமிழ் முழுமதி அந்த அறிவுமதி.

1973-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் மீலாது விழா கவியரங்கத்தில் நம் பேராசிரியர் தலைமையேற்று பங்கேற்கிறார்..

ஒற்றை வரியில் தான் பணிபுரிந்த அனைத்து கல்லூரிகளையும் குறிப்பிட்டு ஒரு தன்னிலை விளக்கத்தை தருகிறார். அது அவரால் மட்டுமே முடியும்.

“பாடியதில் நடுநகரில் பாளையத்தில் பட்டினத்தில்படிவிட்டுப் பட்டிருக்கும் பறவையென அழைத்துவந்தேபாட்டரங்கில் மாட்டிவிட்டீர் பாப்புனையத் தூண்டிவிட்டீர்”

[பாடி – வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி
நடுநகர் – திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி
பாளையம் – உத்தம்பாலையம் ஹாகி கருத்த ராவுத்தர் கல்லூரி
பட்டினம் – அதிராம்பட்டினம் காதி முகைதீன் கல்லூரி]

தபலா அதிர்வு போலத்தாளம் பிசகாக் கதியில்சபையில் ஒலிக்கும் பேச்சில் – கபூர்சந்தனம் கமழச் செய்வார் –

என்று பொருத்தமாகப் பாடுவார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்

அருவிதாங் கேட்டாலும் அழகுயாழ் குழலென்னும்கருவிதாங் கேட்டாலும் கானவானம் பாடிக்குருவிதாங் கேட்டாலும் கூடிவந்து பாராட்டும்திருவிதாங் கோட்டுச் செழும் புலவ!

1973-ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த முதல் இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இறையருட் கவிமணியை புகழ்ந்து கவிக்கோ அப்துல் ரகுமான் பாடிய வரிகள் இவை

திகழும் அவர் கவிதையில் தேமா, புளிமா!
ஆனால் அப்துல் கபூரோஆமா எவர்க்கும் போடாத அரிமா!

இது கவிஞர் மு.மேத்தாவின் புகாழாரம்

இருவரிகளைக் கொண்டு இலக்கியம் படைத்த திருவள்ளுவரைப் போல சின்னச் சின்ன வார்த்தைகளைக் கோர்த்து பாமாலை கோர்க்கும் பூமாலை சூத்திரர்.

பேராசிரியர் கா.அப்துல் கபூர் அவர்களின் தமிழறிவுக்கு இதோ ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின்”

என்ற .வள்ளுவரின் குறளுக்கு பரிமேலழகர், மு.வரதராசனார், மணக்குடவர், கலைஞர் கருணாநிதி, சாலமன் பாப்பையா போன்ற அனைத்து அறிஞர்களும்  “குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்” என்ற பொருளில் தான் அருஞ்சொற்பொருள் விளக்கம் அளித்துள்ளார்கள்.

இதற்கு நேர்மறையான விளக்கத்தைக் கூறி எங்களையெல்லாம் ஆச்சரியத்தில் மூழ்கச் செய்தவர் அவர். “பொய்மையும் வாய்மை இடத்த” என்பதற்கு குற்றமிலா நன்மை ஏற்படின் பொய்யைக் கூட உண்மையின் இடத்திலும் பார்க்கலாம் என்றாலும் பொய்மையானது வாய்மையின் “இடத்த”…..அதாவது இடப்பக்கமே இடம்பிடிக்கமுடியுமே தவிர வலப்பக்கத்தில் ஒருபோதும் இடம் பிடிக்கவே முடியாது” என்று விரிவுரை தந்து வியப்பிலாழ்த்தியவர். ஆம். அபாரமான சிந்தனை கொண்ட அற்புத ஆசிரியப் பெருந்தகை அவர்.

தமிழக கல்லூரி வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு தமிழ்ப் பேராசிரியர் கல்லூரி பேராசிரியராக பணி ஏற்றது கபூர் சாகிப்தான்.

உருது மொழியில் நடைபெறும் “முஷாயிரா” போன்று தமிழ்மொழியில் “கவியரங்கம்” என்ற பெயரில் இன்று நாடெங்கும் நடைபெறும் வழக்கத்தை வாணியம்பாடியில் முதன் முதலில் அறிமுகம் செய்த பெருமையும் அவர்களைத்தான் சாரும்.

தமிழில் உரை அலங்காரத்திற்கும், நடை அலங்காரத்திற்கும் புகழ் பெற்றவர் அறிஞர் அண்ணா. பேராசிரியர் அப்துல் கபூர் எழுதிய ‘இலக்கியம் ஈந்த தமிழ்’என்ற நூலின் முதற்கட்டுரையை அதில் காணப்பட்ட செந்தமிழ் நடைக்குவேண்டி தன் “திராவிட நாடு” பத்திரிக்கையில் வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்தார்.

“இவர் போன்ற நாவன்மை மிக்க நற்றமிழ் வல்லார் நம் கழகத்திற்கு கிடைப்பாரெனில் அதன் பொலிவும் வலுவும் மென்மேலும் சிறந்தோங்கும்” என்று அறிஞர் அண்ணா வியந்த பேரறிவாளர்.

வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியைல் தமிழ் மன்றத்தின் சார்பில் நடந்த வரவேறு நிகழ்ச்சியில் நம் பேராசிரியரின் இரயைக் கெட்டு விட்டு “தன் சிந்தனையோட்டத்தில் முகிழ்ந்தெழும் அரிய கருத்துக்களை, தீந்தமிழ்ச் சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கோர்த்து, தனக்கே உரிய பாணியில் முழ்க்கம் செய்து வருபவர் நண்பர் கபூர் அவர்கள்” என்று புகாழாரம் சூட்டினார்.

நாஞ்சில் நாடு முன்னர் ஓர் அதங்கோட்டாசானை நல்கியது போல், இன்றும் திருவிதாங்கோடு தந்த அதங்கோட்டாசான்

தமிழே என்னும் சொற்கொண்டுதாயே ஊட்டிய கற்கண்டு

என்று பாடி தமிழின் பெருமையை நமக்கு புரிய வைத்தவர் அவர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன், மதியழகன் ஆகியோருடன் ஏற்பட்ட நெருக்கம் பிற்காலத்தில் ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்’ என்று  தமிழ் மறுமலர்ச்சி பூண்டபோது அவர்களை நாடறிந்த நற்றமிழ் பேச்சாளராக தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அடையாளம் காண்பித்தது. கழகத் தலைவர்களில் ஒருவரான சாதிக்பாட்சா பேராசிரியரின் மாணவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

“செந்தமிழுக்கு ஒரு சேதுப்பிள்ளை” என்பதைப்போல் “அழகுத் தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என்று பேராசிரியரின் பெருமையை பறைசாற்றுவோர் உண்டு.

ஒருமுறை “கவிஞராக” என்ற ஒரு நூலை எனக்கு அவர்கள் பரிசளித்து மரபுக்கவிதை எழுத ஊக்குவித்தார்கள்.  கவிதை வரிகளைக் கொடுத்து ‘நேரசை’ ‘நிறையசை’ பிரிப்பது எவ்வாறு, ‘தேமா’, ‘புளிமா’ எங்ஙனம் கண்டறிவது என்று பயிற்சி அளிப்பார்கள்.

 பேராசிரியரின் சந்தம் கமழும் பேச்சும், எழுத்தும் என்னுள் தமிழார்வத்தை மென்மேலும் தூண்டி விட்டது. கவிஞர் கண்ணதாசனின் தலைமையில் கவியரங்கம் ஒன்றினை எங்கள் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தனர். ‘அழுகை’ என்ற தலைப்பில்“மலையழுதால் நதியாகும்; மனமழுதால் கவியாகும்” என்று தொடங்கி “ஈன்ற பொழுதில் தாயழுத கண்ணீரே நாமாகும்”என்று முடிவுறும் என் கவிதையை கவியரசும், பேராசிரியரும் வெகுவாக ரசித்து பாராட்டினார்கள்.

ஒரு நோன்பு பெருநாளின்போது அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த மடலொன்றை இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். உள்நாட்டு அஞ்சலில், மூன்றே மூன்று வரிகளில் கச்சிதமாக தட்டெச்சு செய்யப்பட்ட வாழ்த்து அது:

ஈகைத் திருநாள்இன்பம் தருக;
இறையருள் பொழிக !

அந்த காவிய நாயகனின் நினைவுகள் அலைமோதும் போதெல்லாம் இந்த அஞ்சல் வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பேன். நிறைவான வாழ்வை வாழ்ந்து இறைவனடிச் சேர்ந்த ஆசானின் நினைவுகளில் என் கண்கள் குளமாகிப் போகும்.

அன்னார் மறைந்து இன்றோடு 14 ஆண்டுகள் ஆகின்றன. அருந்தமிழ் ஆர்வலர்கள் இன்றளவும் அவரை நினைவு கூறுகின்றனர்.  இஸ்லாமிய சமுதாயம் அவரது இலக்கிய பணியையும், ஆன்மீகச் சேவையையும் நேஆளும் எண்ணிப் பார்க்கின்றனர். அவரது இழப்பு தமிக்கூறும் நல்லுலகிற்கு ஈடு இணையில்லாத பேரிழப்பு.

– அப்துல் கையூம்
https://nagoori.wordpress.com/2016/01/11/மனதில்-நின்ற-மாமணி/
-------------------------------------------------------------------------------------------

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கா. அப்துல் கபூர் (1924 - 2002) பேராசிரியர், எழுத்தாளர், கவிஞர், கல்வியாளர், பேச்சாளர், இஸ்லாமிய மார்க்க அறிஞர், பத்திரிகையாளர், பன்மொழி வல்லுனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் 1924-ல் பிறந்தவர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 2002-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ம் தேதி மறைந்தார்.

சென்னை முஹம்மடன் கல்லூரியிலும் (தற்போதைய காயிதே மில்லத் மகளிர் கல்லூரி), வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியிலும் தமிழ்த் துறையில் பணியாற்றியவர்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரி யில் தமிழ்துறைத் தலைவராகவும், உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி, அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் முதல்வராகப் பணியாற்றியவர்.

சென்னை கிரஸண்ட் பள்ளியின் (பிறைப் பள்ளி) நிறுவன முதல்வர்.

அவரது தமிழ்ப்புலமைக்குச் சான்றாக அமையும் அவரது 'அரும் பூ ' என்னும் குழந்தைப்பாடல் நூலினை ஆய்வு செய்தோர், பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் பட்டம் பெற்றுள்ளனர். 'இனிக்கும் இறைமொழிகள்' என்னும் பெயரில் திருக்குர்ஆன் வசனங்கள் சிலவற்றிற்கு விளக்கவுரை எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் "மிக்க மேலானவன்" புத்தகம் இறைமறையின் 87ஆவது அத்தியாயத்தின் விளக்கவுரை போல் அமைந்தது. "ஞானப்புகழ்ச்சி ஓர் ஆய்வு" எனும் புத்தகம் தக்கலை பீரப்பா அவர்களின் பாடலை இவர் ஆய்வு செய்து எழுதியது.

இறையருட் கவிமணி, தமிழ்ச் செம்மல், தீன்வழிச் செம்மல், நபிவழிச் செல்வர் , கன்சுல் உலூம் (அறிவுக் களங்சியம்) ஆகிய கெளரவங்களைப் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அவருக்குத் 'தமிழ்ச் செம்மல்' விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

பேராசிரியர் கா. அப்துல் கபூர் கல்விப் பணி:

1946 - 1947 பேராசிரியர், தமிழ்த்துறை, முஸ்லிம் அரசினர் கல்லூரி, சென்னை

1947 - 1952 தமிழ்த்துறைத் தலைவர், இஸ்லாமியக் கல்லூரி, வாணியம்பாடி

1952 - 1956 கீழ்த்திசை மொழித்துறைத்தலைவர், ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சி

1956 - 1962 தமிழ்த்துறைத் தலைவர், கல்லூரி முதல்வர், ஹாஜி கருத்த இராவுத்தர் கெளதிய்யா கல்லூரி, உத்தம பாளையம்

1962 - 1967 தமிழ்த்துறைத் தலைவர், கல்லூரி முதல்வர், காதிர் முஹ்யத்தீன் கல்லூரி, அதிராம்பட்டினம்

1967 - 1974 முதல்வர், பிறைப் பள்ளி, வண்டலூர், சென்னை

1976 - 1980 நிர்வாக அதிகாரி, அல்-அமீன் உயர்நிலைப்பள்ளி, கும்பகோணம்

நிர்வாக அதிகாரி, திராவிட மொழி இயல் நிறுவனம், திருவனந்தபுரம்

வகித்த பிற பொறுப்புகள்:

1. தமிழ்ப் புலவர்க்குழு உறுப்பினர்

2. மதுரை, தஞ்சை மாவட்ட இலக்கிய ஆட்சிக்குழு உறுப்பினர்

3. திருச்சி அகில இந்திய வானொலி நிலைய ஆலோசனைகுழு உறுப்பினர்

4. சென்னை பல்கலைக்கழக பாடநூல் உறுப்பினர்

சிறப்பாசிரியர்:

மதிநா (சிற்றிதழ்)

நூல் வரிசை:

கவிதை

1. நாயகமே

2. அன்னை பாத்திமா

3. நபிமணி மாலை

4. இறையருட் மாலை

5. நபிமொழி நானூறு

6. பொன்மொழி நானூறு

8. காஜா மாலை

9. பீரப்பா மாலை

10. முஹ்யித்தீன் மாலை

11. தலைப்பா (கவியரங்கக் கவிதைகள்)

12. துஆ - 100 (பிரார்த்தனைப் பாடல்கள்)

உரை நடை

1. இலக்கியம் ஈந்த தமிழ்

2. அற வாழ்வு

3. வாழும் நெறி இஸ்லாம்

4. இஸ்லாமிய இலக்கியம் 5 இனிக்கும் இறைமொழிகள்

6. மிக்க மேலானவன்

குழந்தை இலக்கியம்

1. அரும் பூ

மேல் விவரங்களுக்கு: http://gafoorsahib.blogspot.com
நன்றி :https://ta.wikipedia.org/s/752
-------------------------------------------------------------------------------------------------
எனது திருமணத்திற்கு  வாழ்த்துரை வழங்கியவர் இறையருட்கவிமணி அவர்கள் Mohamed Ali 


Mohamed Ali 

No comments: